AgricultureSpecial News

“விவசாயம் என்பது வியாபாரம் அல்ல… வாழ்க்கை முறை!”.. வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்

1937-ல் பிறந்தது முதல் 2013 டிசம்பர் 30-ம் தேதி இயற்கை எய்தும் வரை தன் வாழ்நாளின் பெரும்பகுதிக் காலத்தை, இயற்கை விவசாயத்தை மக்களிடம் கொண்டுசேர்ப்பதிலேயே செலவிட்டவர். இப்போது நம்மாழ்வார் நம்முடன் இல்லை. ஆனால், அவர் பேணி வளர்த்த ஒவ்வொரு செடியும், ஒவ்வொரு மரமும் அவரை உயிர்ப்புடன் நினைவூட்டிக்கொண்டிருக்கின்றன.

லட்சக் கணக்கானோருக்கு இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்த நம்மாழ்வார், இயற்கை விவசாயம்பற்றிக் களமிறங்கிக் கற்றுக்கொண்டது பாண்டிச்சேரி ஆரோவில்லில் இருக்கும் பெர்னார்டுவிடம்தான். மேற்கத்திய நாடுகளின் விவசாய முறைகள், அங்குள்ள இயற்கை விவசாயம்குறித்த நிறைய புத்தகங்களை நம்மாழ்வாருக்கு அறிமுகம்செய்து வைத்தவரும் இவரே.

நம்மாழ்வாரின் தமிழ் பெரும்பாலும் பாமரத் தமிழ்தான். ஆனாலும், தமிழ் இலக்கியம் தொடங்கி ஆங்கில இலக்கியம் வரை அவருக்குப் பரிச்சயம். பெரியாரியம் தொடங்கி மார்க்சியம் வரைக்கும் பாமரத் தமிழில் சொன்னால்தானே ஏழை விவசாயிக்குப் புரியும் என்பார். வாழ்நாளின் பெரும்பாலான நாட்களைப் போராட்டங்களிலும் பயணங்களிலுமே செல விட்டார். எங்கு சென்றாலும் பேருந்து, ரயில் என பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்தினார்; மற்றவர்களுக்கும் அதையே வலியுறுத்தினார்.

பாரம்பரிய விதை ரகங்களை அதிகம் நேசித்தவர் நம்மாழ்வார். அதைப் பற்றிப் பேச்சு வரும்போதெல்லாம், மத்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநராக இருந்த ராதேலால் ஹெர்லால் ரிச்சார்யாவைக் குறிப்பிட்டுப் பேசுவார். ரிச்சார்யா இந்தியாவின் 22,972 பாரம்பரிய நெல் ரகங்களை வெளிநாடுகள் கைக்குச் செல்லாமல் பாதுகாத்தவர். அதனாலேயே தனது பணியையும் இழந்தவர். ரிச்சார்யா மற்றும் இயற்கை விஞ்ஞானிகளின் கோரிக்கைகளைப் புறந்தள்ளி, அத்தனை பாரம்பரிய நெல் ரகங்களையும் பன்னாட்டு நிறுவனமான ஸின்ஜெண்டாவிடம் 2003-ல் அரசு ஒப்படைத்தபோது, கண்ணீர்விட்டு அழுதார் நம்மாழ்வார்.


1960 மற்றும் 70-களில் கலப்பின ரகங்கள் இந்தியாவுக்குள் ஊடுருவும் முயற்சிகள் நடந்துகொண்டிருந்தன. அப்போது கலப்பினங்களைப் பற்றிப் படித்தவர்கள், அனுபவம் வாய்ந்த விவசாயிகளிடையேகூடப் பெரிதாக விழிப்புணர்வு இல்லை. அந்த நேரத்தில் “கலப்பினம் மற்றும் வீரிய ரகங்கள் என்று சொல்லப்படுபவையெல்லாம் உற்பத்தியைப் பெருக்குவதற்காக அல்ல; மாறாக, ரசாயன உரங்களை விற்பனை செய்வதற்கான அரசியலே பசுமைப் புரட்சி பெயரிலான கலப்பின ஊக்குவிப்பு” என்று அன்றே சொன்னார் நம்மாழ்வார்.

நம்மாழ்வார் வேளாண் விஞ்ஞானி மட்டும் அல்ல… மிகச் சிறந்த சுற்றுச்சூழலியலாளரும் ஆவார். மேற்குத்தொடர்ச்சி மலையின் சோலைக்காடுகள் அழிவை எதிர்த்துக் கடைசி வரை போராடினார். சோலைக்காடுகள் இல்லை எனில், ஆறுகள் உற்பத்தி கிடையாது.சோலைக்காடுகள் இல்லை எனில், மனிதனுக்குச் சோறு இல்லை என்பதைத் தனது பிரச்சாரங்களில் வலியுறுத்திவந்தார்.


விவசாயிகளிடம் சென்று பப்பாளி, கொய்யா, வாழை, நாவல் போன்றவை பயிரிடுங்கள் என்பார். தனது கூட்டங்களிலும், ‘‘ஆப்பிள் அரை கிலோ 60 ரூபாய். அதைவிட அதிகம் சத்து இருக்கிற கொய்யா அஞ்சு கிலோ அம்பது ரூபாய். எதைச் சாப்பிடப்போறீங்க?’’ என்று நமது பாரம்பரியப் பழங்களையே வலியுறுத்துவார். ஆப்பிள், ஆரஞ்சு போன்ற அந்நியப் பழங்களைச் சாப்பிடுவதையும் இயன்றவரை தவிர்த்தே வந்தார்.

கடைசி வரை இளைஞர்களை அதிகம் நம்பினார் நம்மாழ்வார். கரூர் மாவட்டத்தில் இருக்கும் அவரது வானகம் பண்ணையில் சுமார் 6,000 இளைஞர்கள் இயற்கை விவசாயப் பயிற்சியை முடித்திருக்கிறார்கள்.

காந்தியைப் போன்றே மேலாடையைத் துறந்தவர் நம்மாழ்வார். கடைசிவரை தனது கொள்கையில் உறுதியாக இருந்தவர், கடும் பனிக்காலத்திலும்கூட சட்டை அணிய மாட்டார்.

Tags
Show More

Related Articles

Close